தருமபுரி – ஜனவரி 16:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் வள்ளல் அதியமான் வடமாடு பயிற்சி மையம் சார்பில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி, நடப்பாண்டில் 6-வது ஆண்டாக கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயிற்சி பெற்ற ஜல்லிக்கட்டு காளைகளும், காளையர்களும் கலந்து கொண்டனர். போட்டியை மடம் கிராமத்தின் ஊர் கவுண்டர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
வாடிவாசல் வழியாக காளைகள் களத்திற்குள் திறந்து விடப்பட்டதும், வீரத்துடன் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் குழுவாகச் செயல்பட்டு திறம்பட அடக்கினர். காளைகளை வெற்றிகரமாக அடக்கிய வீரர்களுக்கு சில்வர் குடம், குத்துவிளக்கு, கேடயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த காளைக்கு சில்வர் குடமும், ரொக்கப் பணப் பரிசும் வழங்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் மிகுந்த ஆக்ரோசத்துடன் விளையாடியதால், போட்டி பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. களத்தில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அலங்கார மேசை, பீரோ உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
போட்டி நிறைவில், பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் வள்ளல் அதியமான் இளைஞர் வடமாடு பயிற்சி மையம் சார்பாக ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

.jpg)