பாலக்கோடு – ஜனவரி 16:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பெலமாரணஅள்ளி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பெலமாரணஅள்ளி, மாரண்டஅள்ளி, சீரியம்பட்டி, பஞ்சப்பள்ளி, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழாவைக் காண அக்கம் பக்கம் கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர். வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க இளைஞர்கள் ஆர்வத்துடன் ஓடி விரட்டிச் சென்றனர்.
இந்த நிலையில், சில காளைகள் ஓடுதளத்தை விட்டு விலகி பார்வையாளர்கள் இருந்த பகுதிக்குள் புகுந்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் தப்பினர். மேலும், வாலிபர் ஒருவரை காளை முட்டியதில் அவர் பலத்த காயமடைந்து, ஆபத்தான நிலையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் விழா நடந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

.jpg)