பென்னாகரம், ஜன. 08:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக் குழு பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி பணிகளை ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட தாய்–சேய் நல கூடுதல் கட்டிடத்தை, சட்டமன்ற உறுதிமொழிக் குழுத் தலைவர் திரு. தி. வேல்முருகன் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மகப்பேறு தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பிரசவத்திற்கு முன் மற்றும் பின் அளிக்கப்படும் மருத்துவ பராமரிப்பு, பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு அறைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் இலவச பெட்டகம் வழங்கப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குழுவினர் கேட்டறிந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மகப்பேறு தாய்மார்களிடமும் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சாலை வசதி தொடர்பாக முன்வைத்த கோரிக்கையை அடுத்து, பொதுப்பணித்துறை நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பு மற்றும் வசதி மேம்படுத்தும் நோக்கில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். இதன்மூலம், தருமபுரி மாவட்டத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடனும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை சேவை செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுதிமொழிக் குழு தெரிவித்தது.

.jpg)