தருமபுரி, ஜன. 08:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரான தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று (07.01.2026) பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், குழு உறுப்பினர்களான சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் ரா. மணி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா. மாங்குடி, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் ஆகியோர் பங்கேற்று, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.
அதன்படி, நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில், ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணிகளை குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இவ்விடுதிக்கான கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன், மீதமுள்ள பணிகள் 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மரக்கன்றுகளும் நட்டுவைக்கப்பட்டன.
தொடர்ந்து, தருமபுரி நகராட்சிக்கு அருகேயுள்ள ஏ.ரெட்டிஅள்ளி – சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில், 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர். இங்கு தரைதளம் மற்றும் முதல் தளங்களில் கடைகள், உணவகங்கள், ஏடிஎம் மையம், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள், கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகள் மற்றும் 55 பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம் அதகபாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, பதிவு பிரிவு, உணவு தயாரிப்பு பகுதி, மருந்தகம் உள்ளிட்ட சிகிச்சைப் பிரிவுகளை ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், இண்டூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, தாய் சேய் நலப் பிரிவு மற்றும் மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை குழுவினர் நேரில் ஆய்வு செய்து, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி. வேல்முருகன் அவர்கள், அதியமான்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், அதகபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பாம்புக் கடி, வெறிநாய்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 100 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இண்டூர் ஏரி எல்லை வரையறுக்கப்பட்டு, சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய தாய் சேய் நலப் பிரிவு கட்டப்பட்டுள்ளதுடன், ரூ.2 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சோகத்தூரில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம், மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள சனத்குமார் நதி மற்றும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஆகியவற்றையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன், துணைச் செயலாளர் ஸ்ரீரா. ரவி, சார்புச் செயலாளர் திருமதி த. பியூலஜா, தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, நகராட்சி ஆணையர் சேகர் உள்ளிட்ட அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)