பென்னாகரம், ஜன.25:
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம், வாக்களிப்பதின் அவசியம், ஜனநாயக கடமையாகிய வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வாக்காளர் பதிவு அலுவலர் நர்மதா, பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், தேர்தல் துணை வட்டாட்சியர் காமராசர் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று ஜனநாயகத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு, வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய ஊக்கம் அளிக்கப்பட்டதுடன், வரும் தேர்தல்களில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என தேர்தல் துறை அலுவலர்கள் வலியுறுத்தினர்.
.gif)

.jpg)