பாப்பாரப்பட்டி, ஜன.04:
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாம்களில் புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக தேவையான படிவங்கள் (படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவம்) வைக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் முகாம்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகுதியுள்ள, தற்போது 18 வயது நிறைவடைந்த நபர்களும், 01.10.2026-ம் தேதிக்குள் 18 வயது நிறைவடைய உள்ள நபர்களும், புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து இந்த முகாம்களில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இணைய வழியாகவும் இந்திய தேர்தல் ஆணையம் இணையதளமான voters.eci.gov.in-ல் உள்ள “New Voters Registration” பக்கத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். தவறான தகவல்கள் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் துல்லியமாக தயாரிக்கப்படுவதும், வலுவான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்குவதும் அனைவரின் கடமை. எனவே, வாக்களிப்பது நமது உரிமையும் கடமையும் என்பதால் தகுதியுள்ள அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.

.jpg)