பாலக்கோடு, ஜன. 5:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மனஅள்ளியில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.01.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் கரும்பு அரவைப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, இதுவரை 22,357 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளதாகவும், சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.32 சதவீதமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி சர்க்கரை கட்டுமானம் 10.04 சதவீதமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும், இணைமின் திட்டத்தின் (00-96EE28001) மூலம் இன்று வரை 2,055 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 1,089 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரும்பு விவசாய அங்கத்தினர்கள் மற்றும் ஆலையின் தொழிலாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்களிடமிருந்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நடப்பு ஆண்டின் கரும்பு நடவு பருவத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை அடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தற்போது நடைபெற்று வரும் ஆலை அரவையை எந்தவித இடைநிறுத்தமும் இன்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தவும் ஆலையின் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலருமான வீ. இரவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)
.jpg)