Type Here to Get Search Results !

பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே மோதல்; விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு.


பாலக்கோடு, ஜன. 22:


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


பாலக்கோடு நகரம், பள்ளிக்கூடத்தான் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலக்கோடு மேற்கு தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இன்னிசை கச்சேரி நடைபெற்று வந்தது. அப்போது, வாழைத்தோட்டம் ஊர் மக்களுக்கும், பாலக்கோடு மேல் தெரு மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்த மோதலில் மேல் தெருவைச் சேர்ந்த பலர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்ததாகவும், அதன் பின்னர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அதே நாளில் இரவு சுமார் 10.30 மணியளவில், வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மேல் தெருவிற்கு வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களை சேதப்படுத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


எனவே, இந்த தகராறு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் சிவா மனுவில் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies