பென்னாகரம், ஜன. 22:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பருவதனஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில், 191 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51 லட்சத்து 96 ஆயிரத்து 327 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், அரசின் திட்டங்கள் தற்போது நேரடியாக மக்களை தேடி வந்து கொண்டிருக்கின்றன என்றும், தகுதியுடைய அனைவரும் இந்த திட்டங்களில் பயனடைய வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தன்னார்வலர்களிடம் உரிய படிவத்தில் தெரிவிக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது அறிவித்தபடி, ஒகேனக்கல் செக் போஸ்ட் முதல் திப்பட்டி கூட்ரோடு வரை சுமார் 16.4 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அகலப்படுத்தவும், தேவையான இடங்களில் பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக தற்போது ரூ.88.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுடன், பணிகள் விரைவில் தொடங்கி நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கினர். மேலும், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

.jpg)