ஏரியூர், ஜன.10:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக கலப்படம் குறித்த விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், எம்.பி.,பி.எஸ்., அவர்களின் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் தனி அரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வில், பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் கட்டாயமாக இருக்க வேண்டிய தகவல்கள் குறித்து விளக்கப்பட்டது. அதாவது, உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், எடை/எண்ணிக்கை, உட்கூறு விவரங்கள், ஊட்டச்சத்து தகவல், நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் அலர்ஜி குறித்த எச்சரிக்கைகள் ஆகியவை குறித்து நேரடி விளக்கமும், பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்த கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன், மருத்துவர் கார்த்திக் உள்ளிட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள், காவல் துறை, தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி கல்பனா ஆகியோர் ஒருங்கிணைந்து பார்வையிட்டனர்.
அரங்கில், வீட்டு அளவில் எளிதாக கலப்படத்தை கண்டறியும் முறைகள் குறித்து செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக தேயிலை, தேன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம், பச்சை பட்டாணி, சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி, செர்ரி பழம் உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து விளக்கப்பட்டது. மேலும், அயோடின் உப்பு மற்றும் அயோடின் இல்லாத உப்பின் வேறுபாடு, அயோடின் உப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சைவ–அசைவ உணவுகளுக்கான பாக்கெட் குறியீடுகள் (வெள்ளை சதுரத்தில் பச்சை/சிவப்பு சின்னங்கள்) உணவுப் பொருட்களைக் கொண்டு நேரடியாக விளக்கிக் காட்டப்பட்டது.
மேலும், பள்ளி அருகே உரிய விபரங்கள் இன்றி பிளாஸ்டிக் குழாய்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டி, அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்தார். அரங்கில் அயோடின் உப்பு, தரமான–தரமற்ற உணவுப் பொருட்கள், கலப்படம் உள்ளவை–இல்லாதவை, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு அரங்கை மருத்துவத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், மக்கள் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ–மாணவியர் மற்றும் பொதுமக்கள் திரளாக பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

