தருமபுரி – ஜனவரி 12:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகள் நிகழும் அபாயமும் அதிகரித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலக்கோடு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள நடைபாதைகள் மற்றும் சாலை ஓரங்களில் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேருந்துப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நடைபாதையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி, பொதுமக்கள் சாலையில் இறங்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே. சிவா, பாலக்கோடு பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைமும் எடுக்கப்படவில்லை. மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இதற்கும் தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, மத்திய அரசு ஒன்றிய பொதுச்செயலாளர் பச்சையப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள் பொன்னுசாமி, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.gif)

.jpg)