தருமபுரி – ஜனவரி 16:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூரில், தமிழ்ச் சங்கம் மற்றும் சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. “இல்லங்களில் திருக்குறள்”, “இயற்கையோடு இணைவோம்”, “வாழும் வள்ளுவமும்” என்ற பொருண்மைகளில் இந்த விழா ஏரியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் நரசிம்மகுமார் தலைமை வகித்தார். சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை துரை முத்துக்குமார், சமூக ஆர்வலர்கள் கமலேசன், ஜெயபிரகாஷ், வெண்ணிலா மல்லமுத்து, கோகுல்காந்தி, சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரியூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜ் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் ஆர்வலர்கள் காதர், ஹரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி கலந்து கொண்டு பேசுகையில், திருவள்ளுவர் அவர்களின் திருக்குறள் இன்று சமுதாயத்திற்கு மிக அவசியமான வாழ்வியல் வழிகாட்டியாக இருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு இல்லத்திலும் திருக்குறள் புத்தகம் இருக்க வேண்டும் என்றும், தினமும் குறைந்தது ஒரு குறளைப் படித்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்களிடையே திருக்குறளின் அறநெறி கருத்துகளை கொண்டு சேர்ப்பது இன்றைய தலைமுறைக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏரியூர் காவல் துறையினர், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpg)