பாலக்கோடு, ஜன.06:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சந்திராபுரம் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் நோக்கில், கிராமத்திலுள்ள 8.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டை அமைத்து நீர் சேகரிக்க கிராம மக்கள் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், பண்ணைக் குட்டை அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தை திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரியின் கணவர் மணிவண்ணன் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதன் காரணமாக பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகள் தடைபட்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். மேலும், ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த எட்டு மாதங்களாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களை அணுகியும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். வரவிருக்கும் கோடை காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதனிடையே, கோடை வெயில் துவங்கும் முன்பே அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றி, சந்திராபுரம் கிராமத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பண்ணைக் குட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, இன்று வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

.jpg)