பாலக்கோடு – ஜனவரி 08:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இணைந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
பாமக நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், பாமக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜவேல், வேளவள்ளி சேகர், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷண்ணன், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன், அதிமுக நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் செந்தில், கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அதிமுக–பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாமக மற்றும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பாலக்கோட்டிலும் இரு கட்சித் தொண்டர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பாமக ஒன்றிய செயலாளர்கள் துரை, சரவணன், முருகன், பெரியம்மாநாகு, சரவணகுமாரி, தமிழ்செல்வி, ஒன்றிய தலைவர்கள் மாதையன், ஏழுகுண்டன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

