பாலக்கோடு, ஜனவரி 08:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, உணவு மற்றும் தண்ணீர் தேடி இரண்டு பெண் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால், சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி காப்புக் காடு, அண்ணாமலைஅள்ளி காப்புக் காடு மற்றும் மோரனஅள்ளி காப்புக் காடுகளில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சூடணூர் கிராமத்தைச் சேர்ந்த மதி (45) என்ற விவசாயியின் சாமந்தி பூந்தோட்டத்தில், ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு பெண் காட்டு யானைகள் நுழைந்து உணவு தேடி தஞ்சம் அடைந்தன. காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, பூந்தோட்டத்தில் யானைகள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே இடத்தில் இரண்டு பெண் காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், சூடணூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். காட்டு யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாய நிலங்களை பாதுகாக்க வனத்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

