ஒகேனக்கல், ஜன. 08:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மடம் சோதனைச் சாவடியில் இருந்து பென்னாகரம் செல்லும் வனப்பகுதி சாலையில், கெட்டுப்போன மீன் மற்றும் நண்டு இறைச்சிகள் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இன்று மடம் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில், சாலை ஓரத்தில் இரண்டு அட்டை பெட்டிகள் நிறைய கெட்டுப்போன மீன், நண்டு இறைச்சிகள் கொட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.
வனப்பகுதியை ஒட்டிய இந்த சாலையில் இவ்வாறு மீன் மற்றும் நண்டு இறைச்சிகளை கொட்டுவதால், வனவிலங்குகள் அவற்றை உண்பதற்கான வாய்ப்பு உருவாகி, வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காற்று மாசும் அதிகரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, வனப்பகுதி சாலைகளில் கெட்டுப்போன மீன் மற்றும் நண்டு இறைச்சிகளை கொட்டிச் செல்லும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

