கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி பகுதி அருகே உள்ள ஓசூர்–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக சென்ற வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலிருந்து அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இறந்தவர் குறித்த எந்த அடையாள தகவலும் கிடைக்காத நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆதரவின்றி இறந்த இளைஞரின் புனித உடலை ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி உரிய முறையில் நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 188 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். மனிதநேய சேவையாக தொடர்ந்து இத்தகைய பணிகளை மேற்கொண்டு வரும் அமைப்பின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

