மை தருமபுரி அமைப்பு சார்பில், கடந்த பல ஆண்டுகளாக அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக தட்டணுக்கள் தானம், இரத்த தானம் உள்ளிட்ட அவசர உதவிகளை தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர்.
புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக குழந்தைகளுக்கு அதிக அளவில் முடி உதிர்வு ஏற்படுவதால், அவர்களுக்கு செயற்கை தலைமுடி தயாரிக்க கூந்தல் தானம் அவசியமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் கூந்தல் தானம் குறித்த விழிப்புணர்வை மை தருமபுரி அமைப்பு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் உங்கராணஹள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் குணசீலன் சொக்கலிங்கம், குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கியதுடன், இரத்த தானமும் செய்து மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.
இந்த நிகழ்வின்போது, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா கூந்தல் தானத்தை பெற்றுக்கொண்டு, குணசீலன் சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த மனிதநேயச் செயல், சமூகத்தில் பிறரையும் கூந்தல் தானம் மற்றும் இரத்த தானம் செய்ய ஊக்குவிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
.gif)

.jpg)