தருமபுரி, ஜன. 24:
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் மனிதநேயச் சேவையாக சாலையோரத்தில் ஆதரவின்றி இருந்த மூதாட்டியை மீட்டு பாதுகாப்பான காப்பகத்தில் சேர்த்த நிகழ்வு பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், தருமபுரி மாவட்ட சமூக நலத்துறையின் அனுமதியுடன், அந்த மூதாட்டியை மை தருமபுரி அமைப்பினர் மீட்டு, வெண்ணாம்பட்டியில் செயல்பட்டு வரும் அன்னையர் ஆலயம் முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர்.
இந்த மனிதநேய நடவடிக்கையில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா மற்றும் தன்னார்வலர் காதர் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டு, மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், அந்த மூதாட்டியின் உறவினர்கள் இந்த தகவலை அறிந்தால், உடனடியாக தொடர்பு கொண்டு, உரிய முறையில் அவரை அடையாளம் காணுமாறு மை தருமபுரி அமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“முதியோர்களை பாதுகாப்போம் – முதியோர்களை அரவணைப்போம்” என்ற மனிதநேயச் செய்தியுடன், சமூகத்தில் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
.gif)

