தருமபுரி, ஜன. 23:
திமுக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம், தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கனிமொழி தலைமையில் ஓசூருக்கு வருகை தந்து, திமுக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில், தருமபுரி திட்ட செயலாளரும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக கலை–இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளருமான என். தேவராஜன் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
-
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டங்களில், தொழிலாளர் உதவி ஆணையாளரிடம் பணி நிரந்தரம் கோரி மனு அளித்த 525 ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
-
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 60,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
-
01.12.2023 முதல் சுமார் 90,000 மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை வழங்கி, 25 மாதங்களுக்கு உரிய நிலுவைத் தொகையை ஒருமுறைச் சேர்த்து வழங்க வேண்டும்.
-
அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மின்வாரியத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையில் சேர்த்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

.jpg)