தருமபுரி, ஜன. 10:
தமிழர் திருநாளான பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாயக் கழிவுகளை எரிப்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பில்லாத பழக்கமாக இருந்து வந்துள்ளது.
ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நகர்ப்பகுதிகளில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிப்பதால் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல் பாதிப்பு, கண் மற்றும் மூக்கு எரிச்சல் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் நச்சுப்புகை கலந்த பனிமூட்டம் காரணமாக சாலை போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதுபோன்ற செயல்களைத் தடை செய்துள்ள உயர்நீதிமன்றம், பழைய மரம் மற்றும் வறட்டி தவிர வேறு எந்தப் பொருட்களையும் எரிக்கக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, போகிப் பண்டிகையின் போது சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

