இண்டூர், ஜன.10:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பேடரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஓசஅள்ளி புதூர் பகுதியில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தம்பியின் மனைவியை கொலை செய்து, உடலை குழியில் தள்ளி மண்ணைக் கொட்டி மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த பிரபு (35) கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ராஜேஸ்வரி (30) என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று மதியம் ஓசஅள்ளி புதூர் கிராமத்தை ஒட்டியுள்ள கரடு புறம்போக்கு நிலத்தில், ராஜேஸ்வரியை அடித்து கொலை செய்து மண்ணைக் கொட்டி மூடியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இண்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லின் இயந்திரம் மூலம் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், ராஜேஸ்வரியின் உடன்பிறந்த மூத்த சகோதரி முனியம்மாளை, பிரபுவின் பெரியப்பா மகன் அனுமந்தன் திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. பிரபு மற்றும் அனுமந்தன் குடும்பத்தினர் ஒரே பகுதியில் வசித்து வந்த நிலையில், அனுமந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கள்ளத்தொடர்பு விவகாரத்தில், அழைத்த நேரத்திற்கு ராஜேஸ்வரி வராததால் அனுமந்தன் கோபமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் அனுமந்தன், ராஜேஸ்வரிக்கு தொலைபேசி செய்து தனிமையில் பேச கரடு புறம்போக்கு பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். ராஜேஸ்வரி வருவதற்கு முன்பே, டிராக்டரில் மண்ணுடன் அங்கு காத்திருந்த அனுமந்தன், அவர் வந்தவுடன் அடித்து கீழே தள்ளி, தலையில் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், மயக்க நிலையில் இருந்த ராஜேஸ்வரியை அருகிலிருந்த பள்ளத்தில் உயிருடன் தள்ளி, மண்ணைக் கொட்டி மூடி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அருகிலுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த பெண்கள் பார்த்து, உடனடியாக இண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சித்தப்பா மகன் தம்பியின் மனைவியை கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்து மண்ணால் மூடிய இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளி அனுமந்தனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

