ஒகேனக்கல், ஜன. 08:
பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து, காவிரி ஆற்றில் உருவாகும் இயற்கை அருவிகளை கண்டு ரசித்து மகிழ்வது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை நீர்த்தேக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், சின்னாறு–கோத்திகல் பரிசல் துறையிலிருந்து பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அந்தப் பகுதிகளில் தண்ணீர் வற்றிய நிலையில், மாமரத்து கடவு பரிசல் துறையிலிருந்து பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மாமரத்து கடவு பரிசல் துறையிலிருந்து சின்னி அருவி வரை சுற்றுலாப் பயணிகளை பரிசலில் அழைத்துச் சென்று, மறுகரையான தொம்மச்சிக்கல் பகுதியில் இறக்கிவிட்டு, அங்கிருந்து மீண்டும் ஐவர் பாணி, ஐந்து அருவி, ஜகன்மோகினி குகை மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிக் காட்டி, மீண்டும் தொம்மச்சிக்கல் பகுதிக்கே பயணிகளை கொண்டு வர வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இப்பகுதியில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இரண்டு படிக்கட்டு வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தொம்மச்சிக்கல் பகுதியில் இருந்த படிக்கட்டுகள் பெருமளவில் சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து, ஒரு பகுதி படிக்கட்டுகள் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டாலும், மற்றொரு பகுதி படிகள் அமைக்கும் பணி ஏலம் விடப்பட்டு தொடங்கப்பட்ட நிலையில், பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக பரிசல் ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை அந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
படிக்கட்டுகள் சேதமடைந்த நிலையில், பரிசல்களை தூக்கிக்கொண்டு மேலே ஏறுவதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் பரிசல் ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
எனவே, ஒகேனக்கல் தொம்மச்சிக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த படிக்கட்டுகளை உடனடியாக சீரமைத்து, புதிய படிகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.


