Type Here to Get Search Results !

ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையை கடந்து வாகன ஓட்டிகளை மிரட்டிய ஒற்றை யானை – வனப்பகுதிக்கு விரட்டிய வனத்துறையினர்.


ஒகேனக்கல், ஜன. 03:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில், வனத்தின் நடுவே அமைந்துள்ள சாலையை கடந்து வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், சாலையோரம் சுற்றித்திரிந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.


தருமபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, கோடை காலங்களில் கர்நாடகா வனப்பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. கோடை காலம் முடிந்தவுடன் இவை மீண்டும் கர்நாடக வனப்பகுதிகளுக்கு திரும்பிச் செல்வதும் வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே கர்நாடக மாநிலம் மற்றும் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்துள்ளன.


தற்போது இந்த யானைகள் ராசி குட்டை, சின்னாறு, கோடுபட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி, ஒகேனக்கல்–பென்னாகரம் சாலையில் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் அடிக்கடி சாலையை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு ஒற்றை யானை தனியாக சாலையை கடந்து செல்வதும் தொடர்ந்து காணப்படுகிறது.


நேற்று, இவ்வாறு சாலையை கடந்த ஒற்றை யானை, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் கிளைகளை உடைத்து உண்ணத் தொடங்கியது. இதைக் கண்ட அவ்வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள், யானையை அச்சுறுத்தும் வகையில் வாகன ஹாரன் அடித்தும் சத்தம் எழுப்பியும் முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒற்றை யானை வாகனங்களை நோக்கி விரட்டியதால், வாகன ஓட்டிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.


சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு வந்து, சாலையோரம் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிலர் யானை சாலையை கடக்கும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதும், செல்பி எடுப்பதிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது ஆபத்தான செயல் என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகளை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும், ஒற்றை யானைகள் அடிக்கடி சாலை கடக்கும் பகுதிகளில் கூடுதல் வன அலுவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies