தருமபுரி, ஜன.03:
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகள் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகின்றன. இதன் முதல்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தேவையான படிவங்கள் (படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவம்) முகாம்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் முகாம் நாட்களில் பணியில் இருப்பார்கள்.
தகுதியுள்ள, தற்போது 18 வயது நிறைவடைந்த நபர்கள் மற்றும் 01.10.2026-ம் தேதிக்குள் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள், புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து முகாம்களில் அளிக்கலாம். பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் சேர்க்கை, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இணைய வழியாகவும் இந்திய தேர்தல் ஆணையம் இணையதளமான voters.eci.gov.in மூலம் “New Voters Registration” பக்கத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை என்றும், தவறான தகவல்களை அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் செம்மையாக தயாரிக்கப்படுவதும், வலுவான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்குவதும் அனைவரின் பொறுப்பாகும். வாக்களிப்பது நமது கடமை; அதற்காக தகுதியுள்ள அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்திரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
.gif)

.jpg)