Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் மீன் வறுவல் மற்றும் மீன் சார்ந்த விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை பயிற்சி நடைபெற்றது.


ஒகேனக்கல், ஜன. 30:


தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான ஒகேனக்கலில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன் வறுவல் மற்றும் மீன் சார்ந்த உணவுப் பொருள் விற்பனையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மீன் வள ஆய்வாளர் அலுவலக பயிற்சி கூட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி, சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டத்தின் கீழ், மதிப்பு கூட்டிய மற்றும் உடனே உண்ணக்கூடிய (Ready to Eat) மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் வகையில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சியில், மீன் சமோசா, மீன் பர்கர், மீன் கட்லெட், மீன் ஃப்ரைடு ரைஸ், மீன் பஜ்ஜி உள்ளிட்ட பல்வேறு மீன் சார்ந்த உணவு வகைகள் தயாரிப்பது குறித்து உணவு வல்லுநர் (Chef) மூலம் நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அடிப்படை உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் ஆகியோரின் மேற்பார்வையில், பென்னாகரம் மீன்வள ஆய்வாளர் வேலுசாமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பயிற்சியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விளக்க உரையாற்றினார். அவர் பேசுகையில், மீன் சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மீன், மசாலா, குடிநீர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அனைத்தும் தரமானதும் பாதுகாப்பானதும் ஆக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும், பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள், மசாலா வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருள் பெயர், தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், எடை, விலை, உட்காரணி விவரம், சைவ–அசைவ குறியீடு மற்றும் நுகர்வோர் தொடர்பு எண் ஆகியவை கட்டாயமாக இடம்பெற வேண்டும் என எடுத்துரைத்தார்.


ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது, செயற்கை நிறமூட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். இவ்வாறான தவறான நடைமுறைகள் வயிற்றுப்போக்கு, இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். ஆகவே, தனிநபர் சுத்தம், சுற்றுப்புற சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழலில் உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.


மேலும், மீன் மற்றும் உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் அனைவரும் உரிய உணவு பாதுகாப்பு பதிவு சான்று (FSSAI) பெற்றே வணிகம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார். இதனுடன், தேயிலை, நெய், தேன், மசாலா பொருட்கள், மிளகு உள்ளிட்டவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து, வீட்டு அளவிலேயே செய்யக்கூடிய செயல்விளக்கங்களும் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மகளிர் உள்ளிட்ட மீன் சார்ந்த விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீன்வள மேற்பார்வையாளர்கள் மகேந்திரன், உதவியாளர்கள் அருண், யேசுதாஸ், பாதுகாவலர் ஜீவா உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் ஒன்றிய மீன்வள ஆய்வாளர் வேலுசாமி நன்றி உரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies