பென்னாகரம், ஜன.06:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதேபோல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் முன்னோர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகள், திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்ள காவிரி ஆறு பகுதியில் உள்ள முதலைப் பண்ணை எதிரே திரளாக வருகை தருவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு ஈமச்சடங்குகள் செய்ய வரும் பொதுமக்கள், காவிரி ஆற்றில் மூழ்கிய பின் தங்களது ஆடைகளை அங்கேயே விட்டுச் செல்லுவதால், முதலைப் பண்ணை எதிரே உள்ள காவிரி ஆறு பகுதி பெருமளவில் துணிக்கழிவுகளால் நிரம்பி காணப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், அப்பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மேற்பார்வையில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கூத்தப்பாடி ஊராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து, முதலைப் பண்ணை எதிரே காவிரி ஆற்றில் தேங்கியிருந்த துணிக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் காவிரி ஆற்றுப் பகுதி சுத்தமாக மாற்றப்பட்டதுடன், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியுடன் வருகை தரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுகளை வீசாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

.jpg)