கம்பைநல்லூர் – ஜன. 09:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாட நூல்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரூர் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஐயா அவர்கள், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் மூன்றாம் பருவ பாடநூல்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தலைமையாசிரியர்கள் தலைமையில் பாடநூல்கள் வழங்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, கெலவள்ளி நடுநிலைப் பள்ளியில் நடுநிலை தலைமையாசிரியர் ச. சாக்கம்மாள் தலைமையில், பட்டதாரி ஆசிரியர்கள் சி. தீர்த்தகிரி, வெ. ஆறுமுகம், கி. பாலாஜி, சி. இரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் கோ. வ. லக்ஷ்மி, கணினி ஆசிரியர் இரா. பாக்கியராஜ், இடைநிலை ஆசிரியர்கள் மா. இந்துமதி, க. தேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு வகுப்பாக மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட நூல்களை வழங்கினர்.
பாட நூல்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், கல்வி மேம்பாட்டிற்கு அரசின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

