தருமபுரி, ஜன.05:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (05.01.2026) சென்னை வர்த்தக மைய வளாகத்தில், “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10,00,000 மடிக்கணினிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட மடிக்கணினி வழங்கும் மாபெரும் விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்விற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற விழாவில், 862 மாணவர்கள் மற்றும் 679 மாணவியர்கள் என மொத்தம் 1,541 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், “உலகம் உங்கள் கையில்” என்ற அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு வழங்கும் இந்த விலையில்லா மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில் Intel 13 / Ryzen 3 7320 Processor, 8GB RAM, 256GB SSD, Windows 11 Home Strategic, BOSS Linux OS ஆகியவை முன்பே நிறுவப்பட்டுள்ளன. மேலும், கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365 மென்பொருளும், செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், சமூக நீதி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவற்றை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சரவணன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கண்ணன், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.jpg)