தருமபுரி, ஜன.03:
தருமபுரி வட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில், 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 10 பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள், மருத்துவ பயனாளி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் 4 நபர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டைகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வட்டாரத்திற்கு தலா 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பொதுமருத்துவம், பொதுஅறுவை சிகிச்சை, எலும்பியல், பேறுகால மருத்துவம், குழந்தை நலம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது–மூக்கு–தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகிறது.
மேலும், முகாமிற்கு வரும் அனைவருக்கும் ஆபா கார்டு (ABHA Card) உருவாக்கப்படுவதுடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS) கீழ் பதிவு செய்து தரப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், கண்புரை நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், படுக்கையிலிருக்கும் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் இராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு. சரவணன், அரசுத்துறை அலுவலர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)