தருமபுரி, ஜன.03:
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (ஜனவரி 03) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பீடா கடைகள், டீ கடைகள் உள்ளிட்ட உணவுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்ததுடன், நகராட்சி கட்டண கழிப்பிடங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட அளவை மீறி கூடுதல் இடம் ஆக்கிரமித்து செயல்பட்ட மூன்று கடைகளுக்கு தலா ரூ.2,500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகராட்சி கட்டண கழிப்பிட குத்தகைதாரர் பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்தில் கடை உரிமையாளர்கள் தவிர வெளிநபர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், விதிமீறி இருசக்கர வாகனங்களை நிறுத்துவோரின் வாகனங்களை சைடு லாக் போட்டு சீல் வைத்து அபராதம் விதிக்க நகராட்சி ஊழியர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
ஆய்வின் போது, நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள மேல் கூரைகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் உடனடியாக பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையர் சேகர், மாதையன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
.gif)

.jpg)