தருமபுரி, ஜன.08:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை ஆலந்தூர், பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், விலையில்லா வேட்டி–சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி முன்னிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கினார். இத்தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.3000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை ஆகியவை அடங்கும்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1106 நியாய விலைக் கடைகள் மூலம், 4,75,621 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.147.96 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக ரூ.6936.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் 4,74,840 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 781 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வரை சுழற்சி முறையில் (Staggering System) அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து பொங்கல் பரிசு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. கு.த. சரவணன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் திரு. தணிகாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

