தருமபுரி – ஜன. 08:
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (08.01.2026) Senthil Public CBSE School வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே சைபர் குற்றத் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி மற்றும் தமிழ் இலோகேஷன் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. N. பாலசுப்ரமணியன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினர். அவர்கள் உரையாற்றும் போது, இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய அவசியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, போதைப்பொருள் தீமைகள் மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் முன்னிலையில் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.

