தருமபுரி, ஜன. 05:
தருமபுரியில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகம் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கணிதத் துறை சார்பில், “தூய மற்றும் பயன்பாட்டு கணிதம் தொடர்பான ஒருவார தொடர் விரிவுரை நிகழ்ச்சி” என்ற தலைப்பில் நடைபெறும் தொடர் நிகழ்வின் தொடக்க விழா இன்று (05.01.2026) நடைபெற்றது. இந்த தொடர் விரிவுரை நிகழ்ச்சி ஜனவரி 09, 2026 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவில், ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் (பொ) பேராசிரியர் முனைவர் எம். செல்வ பாண்டியன் தலைமை தாங்கி, தலைமையுரை ஆற்றினார். கணிதத் துறையின் பொறுப்பாசிரியரும் உதவி பேராசிரியருமான முனைவர் என். அனிதா வரவேற்புரை ஆற்றியதுடன், இந்த தொடர் விரிவுரையின் நோக்கம் மற்றும் அதன் கல்வி முக்கியத்துவம் குறித்து விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
திண்டுக்கல் காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகம்-இன் பேராசிரியரும், உயர்மட்ட வரைபடக் கோட்பாடு மற்றும் வளைவின்னல் அறிவியல் மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் முனைவர் ஜி. மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, “மருத்துவத் துறையில் வரைபடக் கோட்பாட்டின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும், தனது உரையில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிதத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த தொடர் விரிவுரை நிகழ்ச்சியில் கணிதத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் உள்ளிட்ட ஏறக்குறைய 65 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஐந்து நாட்களும் பல்வேறு தலைப்புகளில் கணிதத் துறை வல்லுநர்கள் மாணவர்களுக்கு சிறப்புரைகள் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

.jpg)