பென்னாகரம், ஜன. 10:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில்,
-
20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்,
-
02 கட்டுமான தொழிலாளர்களுக்கு கட்டுமான நலவாரிய பதிவு அட்டைகள்,
-
10 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்,
-
03 நபர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்ட அட்டைகள்என பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
ஆகஸ்ட் மாதம் முதல் தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் மொத்தம் 30 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெருப்பூரில் நடைபெற்ற இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமின் மூலம், அனைத்து வகையான உடல் பரிசோதனைகள், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட (CMCHIS) பதிவு, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ABHA Card உருவாக்கப்படுகிறது.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், பேறுகால மருத்துவம், குழந்தை நலம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம், இயன்முறை, இயற்கை மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட 17 சிறப்பு மருத்துவ சேவைகள் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் இலவசமாக வழங்கப்படுகின்றன. இம்முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

