தருமபுரி, ஜன. 25:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று (25.01.2026) நடைபெற்றது. இந்த இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.
இந்த கையெழுத்து இயக்கத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது கையெழுத்துகளை இட்டு ஜனநாயக கடமையை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்டன.
மேலும், வாக்களிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து சிலிண்டர்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆட்டோக்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM & VVPAT) செயல்முறை விளக்கத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு, “வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை” என்ற செய்தி பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, நகராட்சி ஆணையர் சேகர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க. ஜெயதேவ்ராஜ், தேர்தல் வட்டாட்சியர் அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.gif)

.jpg)