தருமபுரி, ஜன. 22:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026-ஐ முன்னிட்டு, தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM & VVPAT) செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.01.2026) துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்படும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டும், முதல் நிலை சரிபார்த்தல் (FLC) முடிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 16 இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட இயந்திரங்கள், வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இன்று வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம் துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல், தருமபுரி மற்றும் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்காளர்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கும் வகையில் செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அனைத்து தேசிய, மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)