தருமபுரி, ஜன.08:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் சார்பில் HPV (Human Papilloma Virus) தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பயிலரங்கம் இன்று (08.01.2026) நடைபெற்றது. இப்பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், தேசிய நல குழுமத்தின் குழும இயக்குநர் மரு. அ. அருண்தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த பயிலரங்கில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஆசிரியர்கள், கல்வித்துறை மற்றும் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நோக்கில் HPV தடுப்பூசி திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 1978-ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு, 1985-ஆம் ஆண்டு நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, 12 வகை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
2025–2026 நிதிநிலை அறிக்கையில், 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முன்னோடி திட்டமாக கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தருமபுரி மாவட்டத்தில் 7,425 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் “நலம் (NALAM)” இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, மின்னணு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்பயிலரங்கில் சுமார் 450 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு. அ. சோமசுந்தரம், மாநில தடுப்பூசி அலுவலர் மற்றும் இணை இயக்குநர் மரு. கி. வினய்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஐ. ஜோதி சந்திரா, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. டி.எம். மனோகர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

