தருமபுரி, ஜன. 22:
18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, நிரந்தர மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் (DDU-GKY), 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒன்றிய அரசின் 60 சதவீத நிதிப் பங்களிப்புடனும், தமிழ்நாடு அரசின் 40 சதவீத பங்களிப்புடனும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் புதிய 2.0 வடிவம் 2025–26 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளில், 40 தொழில் பிரிவுகளில் குறுகிய கால தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக்குப் பின் உரிய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். இதற்காக 38 பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப பயிற்சிகளுடன், அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடல், கணினி மற்றும் மின்னஞ்சல் பயன்பாடு, ஆளுமை வளர்ச்சி, குழுவாக செயல்படும் திறன் போன்ற மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுவதால், பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவது எளிதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில்
-
Sri Venkateshwarsa Educational Trust நிறுவனத்தில் General Duty Assistant Trainee
-
Sri Maheswara Education Trust நிறுவனத்தில் Field Technician – Computing and Peripheralsஆகிய பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
மேலும், பிற மாவட்டங்களில் ட்ரோன் ஆபரேட்டர், மொபைல் போன் டெக்னீசியன், CNC இயந்திர இயக்கம், செவிலியர் பயிற்சி, ஜூனியர் சாப்ட்வேர் டெக்னாலஜி, AI அனலிஸ்ட், வெப் டெக்னாலஜி, வேர் ஹவுஸ் மேற்பார்வையாளர், 1613 ஆபரேட்டர், சோலார் டிவி அமைத்தல், வெல்டிங், மெடிக்கல் டெக்னீசியன் உள்ளிட்ட அதிக வேலைவாய்ப்பு உள்ள பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சி காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். பயிற்சி காலத்தில் சீருடை, உணவு, தங்கும் இடம், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ள இளைஞர்கள், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், பழைய மாவட்ட ஆட்சியரகம் (கூடுதல் கட்டிடம்), தருமபுரி – 635705 என்ற முகவரியை அணுகியோ, தொலைபேசி எண் 04342 – 233298 அல்லது 155330 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpg)