தருமபுரி – ஜனவரி 12:
தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் குடும்பங்களை நேரில் சந்திக்கும் வகையில் “திண்ணை பிரச்சாரம்” மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன் அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, ஜி.சக்திவேல், தி.வ.தனுசன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
-
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது கைரேகை பதிவு செய்யும் முறையை தவிர்த்து, கையொப்பம் மட்டும் பெற்றுக்கொண்டு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.
-
ஒன்றிய பாஜக அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து, ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் மக்கள் சந்திப்பு இயக்கம் – திண்ணை பிரச்சாரம் நடத்துவது.
-
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து, பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்துவது.
இந்த தீர்மானங்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

.jpg)