தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்து வளர்க்கவும், கலைஞர்களுக்கு உரிய மேடையும் வாய்ப்பும் வழங்கும் நோக்கிலும் “பொங்கல் கலைவிழா” கலை நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்காக “சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2026 ஜனவரி மாதம் சென்னையில் 18 இடங்களில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகள் ஜனவரி 14-ம் தேதி சென்னை தீவுத்திடலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களிலும் “பொங்கல் கலைவிழா” கலை நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சேலம் மண்டலத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கலைக்குழுக்களில் இடம்பெற்ற 120-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் இந்த கலைவிழா நடைபெற உள்ளது.
15.01.2026 அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில்,
-
இராமகிருஷ்ணன் ஸ்ரீனிவாச நாடகக் குழுவினரின் தெருக்கூத்து
-
மல்லையன் ஸ்ரீராம் நாடகக் கலைக்குழுவினரின் தெருக்கூத்து
-
சக்திவேல் – பிரியதர்ஷினி பேண்டு கலைக்குழுவினரின் பேண்டு வாத்தியம்
-
வாசுகியம்மாள் கும்மிப்பாட்டு குழுவினரின் கும்மி ஆட்டம்
-
கிருஷ்ணன் திருச்செந்தூர் முருகன் காவடியாட்டக் கலைக்குழுவினரின் காவடியாட்டம்
-
கிருஷ்ணன் நட்பு பம்பை இசைக்குழுவினரின் பம்பை ஆட்டம்
-
முனியம்மாள் பழனியாண்டவர் கலைக்குழுவினரின் கோலாட்டம்
-
கவியரசன் அழியாத பாரம்பரிய கலைக்குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
என பல்வேறு நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தமிழகத்தின் அரிய மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை நேரில் கண்டு ரசிக்கும் அரிய வாய்ப்பாக இந்த இரண்டு நாள் பொங்கல் கலைவிழா அமையும். எனவே தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கலை ஆர்வலர்கள், இசை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

.jpg)