தருமபுரி – ஜனவரி 13:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியரக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (13.01.2026) நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, சிறுநீரக இரத்த பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள், வாய்ப்புற்றுநோய் பரிசோதனை, இருதய நோய் கண்டறிதலுக்கான ஈ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு பரிசோதனைகள் ஆகியவையும் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சித்த மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், பொது மருத்துவம், கண், காது, எலும்பு, பல் மருத்துவம், நரம்பியல், இயன்முறை மருத்துவம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டன. கூடுதல் மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும் நபர்கள் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இம்முகாமில் மருத்துவ பரிசோதனைகள் செய்து பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, தொடர்புடைய அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)