தருமபுரி, ஜன.04:
திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் எதிர்ப்புகளை மீறி, தங்களின் சொந்த முயற்சியால் கல்வி கற்று, தனித்திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையர்களை கௌரவிக்கும் நோக்கில், 2025–26 ஆம் நிதியாண்டிற்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது.
திருநங்கையர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 15-ஆம் தேதியன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் இம்முன்மாதிரி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதின் கீழ் ரூ.1,00,000/- மதிப்புள்ள காசோலை மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டு திருநங்கையர் தின விருதிற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:
திருநங்கைகள் அரசாங்க உதவிகளைப் பெறாமல் தங்களது வாழ்க்கையை தாங்களே கட்டமைத்திருக்க வேண்டும்.
திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தது 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கை நடத்தவும் உதவியிருக்க வேண்டும்.
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
இந்த விருதிற்கு தகுதியான மற்றும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள், தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 31.12.2025 முதல் 18.02.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpg)