இந்த விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், துறைத் தலைமை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 174 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும், 68 காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் காவல்துறை பேண்ட் வாத்தியக் குழுவினருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், வருவாய்த் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சர் பொது நிவாரண நிதி கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. அதேபோல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.37,636/- மதிப்பிலான தேய்ப்புப் பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.38 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவின் நிறைவாக, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பட்டி தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கிராமிய நடனம், தேசப்பற்று பாடல்கள், வந்தே மாதரம், தமிழர் மரபுக்கலை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது உள்ளிட்ட மாவட்ட அளவிலான துறைத் தலைமை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி–கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தனர்.
.gif)

.jpg)