குடியரசு தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 249 கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கடகத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி மற்றும் செலவின விவரங்கள், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026–27 நிதியாண்டுக்கான கிராம வளர்ச்சி திட்ட ஒப்புதல், தொழிலாளர் வரவு–செலவு திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல், தொகுதி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருள்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அவர்கள், அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிராமங்களின் வளர்ச்சியே மாவட்ட வளர்ச்சியின் அடித்தளம் என்றும் தெரிவித்தார். ஊராட்சிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தால், சிறந்த ஊராட்சிக்கான விருதுகளைப் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒருமுறை பயன்படும் நெகிழிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், மஞ்சப்பை மற்றும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து பேசுகையில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றின் பயன்களை விளக்கினார். பெண் குழந்தைகள் உயர்கல்வி வரை படிக்க வைப்பது சமூகத்தின் கடமையெனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டம் குறித்து விளக்கமளித்த அவர், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளை பதிவு செய்து, கனவு அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, தேசிய தொழுநோய் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள அருள்மிகு காலபைரவர் மற்றும் சென்றாயசுவாமி சோமேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அரசுத் துறை அலுவலர்கள், ஊராட்சி வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)