தருமபுரி – ஜனவரி 10:
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்திய அஞ்சல் துறையின் மூலம் சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பத்து வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு, செல்வமகன் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.500 வைப்பு செய்து, மொத்தம் 601 குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வன்னியர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினர்.
எம்.ஜி.ஆர். அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் வழங்கிய முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

