நல்லம்பள்ளி, ஜன. 10:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு தனி ஆலயமாக விளங்கும் இந்த திருக்கோவிலில், தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது விசேஷ பலன்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூசணி, தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாக நடைபெற, கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

