தருமபுரி – ஜனவரி 29:
தருமபுரி மாவட்டம், சாஸ்திரமுட்லு அடுத்த பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (33) என்பவர், செங்கல் சூளை கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், அரசு பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியப்பன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாப்பாரப்பட்டி பகுதியில் இயங்கி வரும் செங்கல் தயாரிப்பு சூளையில் தங்கி கூலி தொழில் செய்து வந்தார். கடந்த ஜனவரி 26ஆம் தேதி, தனிப்பட்ட தேவைக்காக பாப்பாரப்பட்டி டவுனுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், பணிகள் முடிந்து மீண்டும் செங்கல் சூளைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, பழைய பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே சென்றுகொண்டிருந்த போது, அஞ்செட்டியில் இருந்து தருமபுரி நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, கன்னியப்பன் சென்ற டூவிலர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த கன்னியப்பனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், வியாழக்கிழமை அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். கன்னியப்பன் உயிரிழந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசு பேருந்து விபத்திற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த கன்னியப்பனுக்கு மனைவி சிவகாமி, 11 வயதுடைய மகன் முத்துவேல் மற்றும் 3 வயதுடைய மகள் அனன்யா உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமான கன்னியப்பன் உயிரிழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
.gif)

.jpg)