தருமபுரி, ஜன. 29:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பில், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம் 2026” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் 30.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
தடகளம், ஸ்டிரீட் கிரிக்கெட், கேரம், வாலிபால், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளில் ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மட்டுமே மாவட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், ஓவியம் மற்றும் கோலப் போட்டிகள் நேரடி மாவட்ட போட்டிகளாக நடைபெறும். கபாடி போட்டிகள் அனைத்தும் மேட்-ல் நடத்தப்படுவதுடன், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேட்-ஷூ கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
கோலப் போட்டிக்கு “செம்மொழியான தமிழ்மொழி”, ஓவியப் போட்டிக்கு “தமிழ்நாடு விளையாட்டில் – முதல் மாநிலம்” என்ற தலைப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்விரு போட்டிகளுக்கும் தேவையான உபகரணங்களை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளும் காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் அறிக்கை செய்ய வேண்டும். காலதாமதமாக வருபவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.6,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.4,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறும் ஸ்டிரீட் கிரிக்கெட் மற்றும் கபாடி வீரர், வீராங்கனைகள் மட்டுமே மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.75,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.50,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.25,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)