பாலக்கோடு, ஜன. 28:
77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் சார்பில் சிறப்பான தேசபக்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சங்கத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டது. கவுரவ தலைவர் பொன்னுசாமி மற்றும் செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகர் சங்க தலைவர் முத்து, பாஜக மாவட்ட அணி துணைத் தலைவர் சிவா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, முன்னாள் முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், “ஜெய்ஹிந்த்”, “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கீ ஜெய்” போன்ற தேசபக்தி முழக்கங்களுடன் கடைவீதி, ஸ்தூபி மைதானம் வழியாக காவல் நிலையம் வரை சென்று நகரம் முழுவதும் தேசபக்தி உணர்வை பரப்பியது. ஊர்வலத்தின் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு, குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், வணிக சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என பல தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு குடியரசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
.gif)

.jpg)